திருவாரூரில் இருந்து தஞ்சை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா?
திருவாரூரில் இருந்து தஞ்சை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவாரூரில் இருந்து தஞ்சை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
ரெயில் வசதி இல்லை
உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் ஓடும் நகரம் திருவாரூர் ஆகும். பல ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் திருவாரூருக்கு போதிய ரெயில் போக்குவரத்து வசதிகள் இல்ைல. திருவாரூரில் முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். இதனால் திருச்சி கோட்டத்தின் முக்கிய பகுதியாக திருவாரூர் மாறும்.
மதுரைக்கு ரெயில்...
அதேபோல அதிகாலையில் திருவாரூரில் இருந்து தஞ்சை திருச்சி வழியாக மதுரைக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்றும் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்ட பகுதியில் ரெயில் சார்ந்த சேவைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலை 7.30 மணிக்கு பிறகு திருச்சியில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரை ஒரு பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி வரை நீட்டிப்பு
அதேபோல் ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு காலையிலும் மாலையிலும் பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக விரைவு ரெயில் இயக்க வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்களை குறைந்தபட்சம் திருத்துறைப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும்.
திருச்சியில் இருந்து தஞ்சை திருவாரூர் வழியாக அகஸ்தியன்பள்ளிக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். மேலும் தற்போது சென்னையில் இருந்து காரைக்கால் வரை இயக்கப்படும் கம்பன் விரைவு ரெயிலை முன்பு போல் காரைக்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே ஒரு ரெயில்
மேலும் தஞ்சையில் இருந்து திருவாரூர், நாகை வழியாக தினமும் 6.45, 7.55, 8.55 என 1 மணிநேரத்திற்கு ஒரு ரெயில் காரைக்காலுக்கு இயக்கப்படுகிறது. ஆனால் மறுமார்க்கத்தில் காலை நேரத்தில் இயக்கப்படவில்லை. அதேபோல் மாலை மற்றும் இரவு நேரத்தில் மாலை 6 மணிக்கு பிறகு திருச்சியில் இருந்து திருவாரூர், நாகைக்கும், திருவாரூரில் இருந்து திருச்சி, தஞ்சைக்கு 7.25-க்கு பிறகு எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படுவதில்லை.
இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் மாலையில் வீடு திரும்ப ஒரே ரெயிலை மட்டுமே நாடவேண்டிய நிலை உள்ளது. எனவே திருவாரூர் வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.