நடைமேடையில் தூங்கும் பயணிகள்
கும்பகோணம் பஸ்நிலையத்தில் காத்திருப்பு கூடம் இல்லாததால் பயணிகள் நடைமேடையில் தூங்குகின்றனர். பூட்டி கிடக்கும் கழிவறையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் பஸ்நிலையத்தில் காத்திருப்பு கூடம் இல்லாததால் பயணிகள் நடைமேடையில் தூங்குகின்றனர். பூட்டி கிடக்கும் கழிவறையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதிய வசதிகள் இல்லை
கும்பகோணம் மாநகராட்சியானது காவிரி, அரசலாறு என 2 ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவகிரக கோவில்கள், புராதன கோவில்கள் இருக்கின்றன. கும்பகோணத்தில் நடக்கும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழா ஆகும். இவ்வாறு ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் மாநகராட்சியின் நடுவே புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் பஸ் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை.
கூடுதல் கட்டணம்
கும்பகோணத்தில் இருந்து கிராம பகுதிகளுக்கு பகல் நேரத்தில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் அதிகாலை நேரத்தில் வெளியூரில் இருந்து வருபவர்கள் காலையில் புறப்படும் பஸ்சில் செல்ல பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தனியார் வாகனங்களில் சென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
பூட்டியே கிடக்கும் இலவச கழிவறை
இதனால் காலை வரை பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர். பயணிகள் காத்திருக்க பஸ் நிலையத்தில் காத்திருப்பு கூடம் இல்லாததால் அவர்கள் திறந்தவெளியில் நடைமேடையில் தூங்குகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களில் சில இடங்களில் காரை பெயா்ந்து விழுந்து தற்காலிகமாக பூசப்பட்ட நிலையில் உள்ளது. அதே போல் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிவறை நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது.
காத்திருப்பு கூடம் வேண்டும்
திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் அமரும் இடம் உள்ளது. ஆனால் அவை செயல்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்பு இடம் பயனற்ற நிலையில் இருப்பது வேதனையாக உள்ளது. இதேபோல் கால்நடைகளும் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே சுற்றி திரிகின்றன. அவை இரவு நேரங்களில் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகிலேயே படுத்து கொள்வதால் பஸ் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காத்திருப்பு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பூட்டிகிடக்கும் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.