வாகனங்களுக்கான சுங்க கட்டண வசூல் மையத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள்
வாகனங்களுக்கான சுங்க கட்டண வசூல் மையத்தில் பயணிகள் சிக்கித்தவிக்கும் நிலை உள்ளது.
செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் ஐதராபாத், சென்னை, பெங்களூரு, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து அதிக அளவில் பயணிகள் விமானங்களில் பயணித்து வருகின்றனர். இதில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரை 7 முதல் 8 விமானங்கள் வரை திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையாக புறப்பட்டு செல்கின்றன. அந்த விமானங்களில் பயணிக்க அதிக அளவில் பயணிகள் தற்போது திருச்சி விமான நிலையத்திற்கு வருகின்றனர். இதற்காக அவர்கள் வாகனங்களில் வரும்போது திருச்சி விமான நிலைய நுழைவு வாயிலில் உள்ள வாகனங்களுக்கான சுங்க கட்டண வசூல் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுங்க கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் விமான நிலையத்திற்குள் செல்வதற்கு காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் சுங்க கட்டண வசூல் மையத்தில் கூடுதல் கவுண்ட்டர் அமைத்து கட்டணம் வசூலித்தால் பயணிகள் சிரமப்படுவதை தவிர்க்கலாம். எனவே காலை நேரத்தில் அங்கு கூடுதல் கவுண்ட்டர்களை இயங்கச் செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.