வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பயணிகள்


வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பயணிகள்
x
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசலில் பயணிகள் சிக்கி தவிக்கும் நிலைக்கு தீர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளுடன் வரும் வாகனங்கள்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணிப்பதற்காக பயணிகள் அதிக அளவில் வாகனங்களில் விமான நிலையத்திற்கு வருகின்றனர்.

அவ்வாறு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத்தவிர பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் 5 நிமிடங்களுக்குள் வெளியே சென்றால், அந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் பகுதியில் வாகனங்கள் பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அகற்றப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வரும் வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும் இடத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதால், அப்பகுதியில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே வரும் வாகனங்கள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கும் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.

கோரிக்கை

மேலும் பயணிகளை இறக்கி விடுவதற்கும், ஏற்றுவதற்கும் வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலால் 5 நிமிடத்திற்குள் வெளியே செல்ல முடியாத நிலையில், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 செலுத்தும் நிலையும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண விமான நிலைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story