இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி
பந்தலூர் பஸ் நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் பஸ் நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்லும் சாலையில் பந்தலூர் பஜார் உள்ளது. சேரம்பாடி, கொளப்பள்ளி, உப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தாலுகாவின் தலைமையிடமாக பந்தலூர் உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் சாலையில் நிறுத்தப்பட்டு வந்தது.
இதனால் பயணிகள் மழை மற்றும் வெயிலில் காத்து நிற்கும் நிலை காணப்பட்டது. இதனால் பந்தலூரில் பஸ் நிலையம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு ரூ.2.30 கோடி செலவில் வணிக வளாகங்களுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் பயணிகள் வருகை இல்லாமல் காணப்பட்டது.
இருக்கைகள் இல்லை
தொடர்ந்து தெருக்களில் சுற்றி திரியும் கால்நடைகளின் கூடாரமாக மாறியது. இதனால் பழைய பஸ் நிலையத்ததை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்தது. தொடர்ந்து வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு பயணிகளும் வரத் தொடங்கினர்.
ஆனால், இதுவரை பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் இல்லை. இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் தரையில் அமரும் நிலை காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் மழை பெய்து வருவதால் சில சமயங்களில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.