டிக்கெட் எடுக்க ஊழியருடன் மல்லு கட்டும் பயணிகள்
திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து வகை டிக்கெட்டுக்கும் ஒரே ஒரு கவுண்ட்டர் மட்டுமே இருப்பதால் டிக்கெட் எடுக்க ஊழியருடன் தினமும் பயணிகள் மல்லு கட்டுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. மாநகராட்சி தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த ரெயில் நிலையம் வழியாக தினசரி தென் மாவட்டங்களுக்கும், சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப டிக்கெட் முன்பதிவு செய்ய தனி கவுண்ட்டரும், பயணிகள் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் கொடுக்க தனி கவுண்டரும் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து சென்று வந்தனர். தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பவர்களும் இந்த கவுண்ட்டரிலேயே டிக்கெட் எடுத்து வந்தனர்.
டிக்கெட் கவுண்ட்டர் மூடல்
கொரோனா ஊரடங்கின்போது ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கவில்லை. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் கவுண்ட்டர் மூடப்பட்டது. இதனால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும், பயணிகள் ரெயிலில் செல்பவர்களுக்கும் ஒரே கவுண்ட்டரில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன.
இதில் பயணிகள் ரெயில், நிலையத்திற்குள் வந்துவிட்டால் முன்பதிவு டிக்கெட்டுகள் கொடுப்பது நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த ரெயில் சென்ற பிறகு தான் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் மற்ற பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் முன்பதிவு டிக்கெட் முடிந்து விடுகிறது. தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பதிலும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது.
மல்லு கட்டும் பயணிகள்
இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வருபவர்களும், தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க வருபவர்களும் கடும் அவதி அடைகிறார்கள். அதுமட்டுமின்றி டிக்கெட் எடுக்க, ரெயில்வே ஊழியருடன் தினமும் மல்லு கட்டுகிறார்கள். இதனால் ரெயில் டிக்கெட் எடுக்க வருபவர்களுக்கும், ரெயில்வே ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்படுவதை தினமும் காணமுடிகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி மூடிக்கிடக்கும் முன்பதிவு மைய கவுண்ட்டரை திறக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பாதிாிப்புலியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.