வேம்பாரில் பத்திரகாளியம்மன்கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினையால் பரபரப்பு


வேம்பாரில் பத்திரகாளியம்மன்கோவில்  சுற்றுச்சுவர் கட்டுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினையால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேம்பாரில் பத்திரகாளியம்மன்கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதில் திங்கட்கிழமை இருதரப்பினர் இடையே பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

வேம்பார்:

வேம்பாரில் பத்திரகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசார் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது.

கோவில் சுற்றுச்சுவர் பிரச்சினை

விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில், பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் புனித தாமஸ் தேவாலய நிர்வாகிகள் இடையே பல ஆண்டுகளாக சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பாக நில உரிமை பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சார்பில் பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் சுற்றுச்சுவர் கட்டிக்கொள்ளலாம் என்றும், அதற்கு மாவட்ட போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது அதை தொடர்ந்து, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் கடந்த 13-ந் தேதி போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கினர்.

நிலஅளவீடுக்கு எதிர்ப்பு

அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியதால், கோவில்பட்டி உதவி மகாலட்சுமி தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் கோவில் நிர்வாகத்திற்குரிய நிலங்கள் நில அளவீடு செய்து தரப்படும். அதன்பின் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 17-ந்தேதி தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நில அளவீடு பணி நடைபெற்றது.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து நேற்று பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் அதிகாரிகள் போராட்டம் இருதரப்பினர்் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதானம்

அப்போது, சுற்றுச்சுவர் கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள குப்பை, முள்செடிகளை அகற்றி அந்தப் பாதையை தேவாலயத்தினர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அந்த முள்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தருவதாக கோவில் நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதை தேவாலயம் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து இருதரப்பினரும் சமாதானம் அடைந்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த பணி நடந்தது. அதேபோன்று பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் சுற்றுசுவர் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த பல நாட்களாக இருதரப்பினர் இடையே நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


Next Story