கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை


கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்

விவசாயி

கடலூர் முதுநகர் அருகே உள்ள வழிசோதனைபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அன்னவெளி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சங்கர் மீது மோதியது. இதில் சங்கரின் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சங்கருக்கு எலும்பு முறிவால் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தனது மனைவி மஞ்சுளாவிடம், கழிவறைக்கு செல்வதாக கூறிச் சென்றார்.

இதற்கிடையே நீண்ட நேரமாகியும் கழிவறைக்கு சென்ற கணவர் வராததால், அவரது மனைவி மஞ்சுளா, கழிவறைக்கு சென்றார். அங்கு அவர் கதவை தட்டி பார்த்தும், திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தூக்கில் பிணம்

அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கழிவறையின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு அவர், கழிவறை ஜன்னலில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், எலும்பு முறிவால் வலி தாங்க முடியாமல் அவதியடைந்த சங்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story