அவசர கால மருந்துகள் இல்லாததால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பாதிப்பு


அவசர கால மருந்துகள் இல்லாததால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பாதிப்பு
x

திருவண்ணாமலை அருகே பழையனூரில் உள்ள சுகாதார நிலையத்தில் அவசர கால மருந்துகள் இல்லாததால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் திருவண்ணாமலைக்கு அனுப்பப்படும் அவலம் உள்ளது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை அருகே பழையனூரில் உள்ள சுகாதார நிலையத்தில் அவசர கால மருந்துகள் இல்லாததால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் திருவண்ணாமலைக்கு அனுப்பப்படும் அவலம் உள்ளது.

மருந்து கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளும் நோய்வாய்ப்படுகின்றன.

அரசு சுகாதார நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூரில் அரசு சுகாதார நிலையம் உள்ளது.

சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் காய்ச்சல், தலைவலி, விஷக்கடி போான்ற அவசர கால சிகிச்சைகளுக்கு இங்குதான் வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகள் பரிசோதனைக்காகவும் பிரசவத்திற்காகவும் வருகின்றனர்கள்.

ஆனால் இவ்வளவு முக்கியமானதாக விளங்கும் இந்த சுகாதார நிலையத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாதது வேதனையாக உள்ளது. சுகதாதார நிலையத்துக்கு வருபவர்கள் காத்திருப்பதற்கு போதிய இருக்கை வசதி செய்யப்படாததால் அவர்கள் கட்டிடத்தின் முன் பகுதியில் அமர்ந்தும் ஆங்காங்கே உள்ள இடத்திலும் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.

அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கழிவுகளை முறையாக அழிப்பதற்கு வசதி உள்ளது.

ஆனால் இங்கு பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக பள்ளம் தோண்டி அதில் கொட்டி பாதுகாப்பான முறையில் அகற்றாமல் அருகில் உள்ள ஒரு இடத்தில் குவியல் குவியலாக கொடடி வைத்து அதில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருவது மட்டுமல்லாமல் கால்நடைகளும் தொற்று நோயில் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமூக விரோதிகள் கைவரிசை

எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாததால் சுகாதார வளாகங்களில் உள்ள இரும்பு பொருட்களை அவ்வப்போது சமூக விரோதிகள் திருடிச் சென்று வருகின்றனர்.

சுகாதார நிலையத்தின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தும் பயன்பாடும் இல்லாமல் சேதமான நிலையில் காணப்படுகிறது.

இதுபோன்ற குறைகளை சரி செய்வதற்கு வட்டார மருத்துவ அலுவலரோ அல்லது மாவட்ட சுகாதார துறையோ, மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சுற்றுவட்டாரத்தின் மையப்பகுதியாக விளங்கும் இங்கு கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் விஷக்கடி உள்ளிட்ட அவசர கால சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.

ஆனால் இங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததாலும் அவர்களை 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும் அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.

இதனால் அவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தும் விடுகின்றனர். மேலும் இப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருவதால் இங்கு பாம்பு மற்றும் நாய்க்கடியால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

அதற்குண்டான தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று வந்தால் விஷக்கடி, நாய்க்கடிக்கான மருந்து இங்கே இல்லை என்றும் நீங்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வாருங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர்.

இதுபோன்ற அடிப்படை தேவைகளை சரி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிநீர் வசதி

சுகாதார வளாகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.

எனவே அனைத்து குறைகளையும் சரி செய்து பாம்புக்கடி, நாயகடி உள்ளிட்ட அவசர கால சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் 24 மணி நேரமும் இருக்கும்படியும் டாக்டர்கள் 24 மணி நேரமும் சிகிச்சைக்கு தயாராக இருக்கவும், அனைத்து பிரிவு டாக்டர்கள் பணியிடத்தை நிரப்பவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மருத்துவமனைக்குள் சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க சுற்று சுவர் அமைத்து கண்காணிப்பு கமேராவையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மருத்துவமனை வளாகத்தில் செடி, கொடி, புதர்கள் நிறைந்து காணப்படுவதால் விஷ சந்துக்களால் நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.

சில நேரங்களில் பாம்புகள் கொடிய விஷம் உள்ள தேள் உள்ளிட்டவைகள் சுகாதார நிலையத்திற்குள் வந்து விடுகிறது. இதனால் கடும் அச்சத்துடன் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். எனவே செடி, கொடி, புதர்களை அகற்றி சுகாதார நிலையத்தை பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேம்படுத்த வேண்டும்

மேலும் இது குறித்து மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறுகையில் ''சுகாதார வளாகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் சிகிச்சை அளிப்பதற்கான போதுமான கருவிகள் இல்லாததால் அவசர காலத்தில் வரும் நோயாளிகளை எங்களால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும், அதனால் அவர்களை தலைமை மருத்துவமனையான திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்'' என்றும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு இங்குள்ள அரசு சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும்'' என்றார்.

எனவே பழையனூர் சுகாதார நிலையத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தேவையான நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story