காட்டாம்பூண்டி சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்காமல் நோயாளிகள் அலைகழிப்பு


காட்டாம்பூண்டி சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்காமல் நோயாளிகள் அலைகழிப்பு
x

காட்டாம்பூண்டி சுகாதார நிலையத்தில் முதலுதவி கூட அளிக்காமல் நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

காட்டாம்பூண்டி சுகாதார நிலையத்தில் முதலுதவி கூட அளிக்காமல் நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார நிலையம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாம்பூண்டி. இங்கு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அவசரகால சிகிச்சை, முதலுதவி மற்றும் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.

மேலும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்டவைகள் கடித்தால் இந்த சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக மாலை நேரங்களில் அதிக அளவில் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றால் மருத்துவர்கள் இல்லை என்றும், நீங்கள் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றும் அலைகழிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்கள் இல்லை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சுகாதார நிலையத்திற்கு குழந்தைகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேறு அரசு மருத்துவமனையோ அல்லது தனியார் மருத்துவமனையோ சென்று விடுகிறோம். ஆனால் இந்த மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிப்பது கூட கிடையாது.

இதனால் பல மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு மருத்துவர்கள் இல்லை நீங்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் சில நேரங்களில் உயிரிழக்கக்கூடிய சூழலும் நிலவி வருகிறது. இங்கு பணியாற்றும் செவிலியர்களிடம் கேட்டால் மருத்துவர்கள் இல்லை என்றும், எந்த விதமான சிகிச்சையும் எங்களால் அளிக்க முடியாது என்றும் அதனால் நீங்கள் வேறு இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றும் கூறுகின்றனர். சாதாரண வெட்டு காயம் அல்லது விபத்தில் அடிபட்டு வரக்கூடியவர்களுக்கு கூட முதலுதவி அளிக்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாலை, இரவு நேரங்களில் மருத்துவர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story