டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னவாசல்:
டாக்டர்கள் பற்றாக்குறை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 6 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது, 3 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால், கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பல்வேறு நோய்களுக்கும், அவசர சிகிச்சைக்கும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணி கணக்கில் காத்திருத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட போதிய மருத்துவர்கள் இல்லாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
உயிர் இழப்பும் ஏற்படுகிறது
இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலுப்பூர்-அன்னவாசல் மெயின் சாலையில் இந்த மருத்துவமனை உள்ளதால், தினமும் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வருவோருக்கு முதலுதவி சிகிச்சை கூட பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சாலை விபத்துகள், விஷகடிகள் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வேண்டியவர்கள் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் அங்கு செல்வதற்குள் உயிர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. எனவே அன்னவாசல் மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையிட்டுள்ளனர்.
எக்ஸ்ரே கருவி
கடந்த பல மாதங்களாகவே அன்னவாசல் அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே கருவி பழுதாகி வேலை செய்யவில்லை. இதனால் எக்ஸ்ரே கருவிக்கு மாலை அணிவித்து இரங்கல் தெரிவிக்கப்படும் என கம்யூனிஸ்டு கட்சி அறிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விராலிமலை அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு எக்ஸ்ரே கருவியை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது. பின்னர் ஒரு மாதத்தில் மீண்டும் அந்த எக்ஸ்ரே கருவி அதே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அன்னவாசல் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி வேலை செய்யவில்லை. இதே போன்று அன்னவாசல் அரசு மருத்துவமனையை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதால் அன்னியர்கள் உள்ளே வந்து மது அருந்துவதும், கெட்ட செயலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.