பத்திரகாளி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
சிவகிரி அருகே, பத்திரகாளி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்து தெற்கு சத்திரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெருந்திருவிழா நடப்பது வழக்கம். அதனை போன்று இவ்வாண்டு பூக்குழி திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மன் மற்றும் ஏனைய சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
நேற்றைய தினம் ஐந்தாம் திருவிழா அன்று பூக்குழி திருவிழாவையொட்டி மூலவர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. காலை 8.15 மணி அளவில் பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலுக்கு முன்பாக பூங்குழி இறங்கும் திடலில் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.
மாலை 5.45 மணி அளவில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. சப்பரத்தின் முன் பக்தர்கள் பக்தி கோஷமிட்டு சென்றனர். சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 6.30 மணியளவில் கோவில் முன் பூக்குழி திடலில் நின்ற வுடன் முதலில் ஆலயத்தில் சாமி கொண்டாடி (மறுலாடி) காளிமுத்து பூக்குழி இறங்கியவுடன் ஏனைய பக்தர்களும் பூக்குழி இறங்கினர்.
பூக்குழி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், காப்புகட்டிகள் சங்கத்தினர், ஆலய பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் ராயகிரி, வடுகப்பட்டி, சிவகிரி, தென்மலை, தளவாய்புரம், பாண்டிச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.