உட்பிரிவு பட்டா மாறுதல் கோப்புகள் தேக்கத்தால் பாதிப்பு


உட்பிரிவு பட்டா மாறுதல் கோப்புகள் தேக்கத்தால் பாதிப்பு
x
திருப்பூர்


உட்பிரிவு பட்டா மாறுதல் கோப்புகள் தேங்குவதால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணனிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் சப்-கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் விவசாயிகள் மனு கொடுத்து முறையிட்டனர்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் கோட்டத்தில் உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்கள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவால் செய்யப்படுகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்கள் ஆயிரக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்கள் முதுநிலை வரிசைப்படி (சீனியாரிட்டி) தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்கள், பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் (எஸ்.டி.ஆர்) கோப்புகளும் விவசாயிகள், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் கோரும் கோப்புகளும் (ஆர்.டி.ஆர்) ஒரே இனமாக முதுநிலை வரிசைப்படி தேர்வு செய்து வருகிறார்கள்.

பட்டா மாறுதல் கோப்புகள் தேக்கம்

மாதம் ஒன்றுக்கு 1,100 கோப்புகள் தேக்கம் அடைகிறது. ஒரு பிர்கா சர்வேயர் மாதம் ஒன்றுக்கு 100 கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாலும் ஒரு தாலுகாவில் 4 சர்வேயர் இருந்தாலும் 400 கோப்புகள் தான் முடிக்கப்படும். மீதம் உள்ள 700 கோப்புகள் தேக்கம் அடையும். அதன்படி வருடத்துக்கு 8 ஆயிரம் கோப்புகள் தேக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய முடியாமல் சிரமம் அடைகிறார்கள்.

சர்வேயர்களுக்கும் பல்வேறு பணிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் எஸ்.டி.ஆர். கோப்புகள், ஆர்.டி.ஆர். கோப்புகள் ஒரே முதுநிலை வரிசைப்படி இருந்தால் பாதிப்பு அதிகமாகும். இதைதவிர்க்க எஸ்.டி.ஆர். மற்றும் ஆர்.டி.ஆர். கோப்புகளுக்கு தனித்தனி முதுநிலை வரிசைப்படி கடைபிடித்தால் சமாளிக்க முடியும். ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் கோரும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்காலிக சர்வேயர்களை நியமித்து தேங்கியுள்ள கோப்புகளை விரைவில் தீர்வு காண வேண்டும்.

மேல்நிலைத்தொட்டி

சின்னாண்டிப்பாளையம் பிரிவில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மேல்நிலைத்தொட்டியை சூழ்ந்து மழைநீர் அதிகம் தேங்கியுள்ளது. குடிநீர் வால்வும் தண்ணீரில் மூழ்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதை தவிர்க்க கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story