தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரிடம், அவினாசி தாலுகா அய்யம்பாளையம் கிராமம் கானாங்குளம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் 'கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பத்தினர் நெருக்கடியான சூழ்நிலையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தோம். அதனடிப்படையில் அய்யம்பாளையம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடம் 6 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து 42 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தனர்.
அந்த இடத்தை வகை மாற்றம் செய்து வழங்க இருந்த நிலையில் அவினாசி தாசில்தார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட சிலர், சம்பந்தப்பட்ட இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். கூட்டுறவுமையம் அமைக்க வேண்டும் என்று கூறி எங்களுக்கு பட்டா வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் பட்டா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த குடியரசு தின விழாவில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டம் நடத்திய போது விரைவில் பட்டா வழங்குவதாக எங்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகும் பட்டா வழங்கப்படவில்லை.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பட்டா வழங்க உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மறைமுகமாக எதிர்ப்பதால் பட்டா கிடைக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.