ராஜாஜிபுரம் மக்களுக்கு பட்டா வழங்கப்படும்;அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
ராஜாஜிபுரம் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
ராஜாஜிபுரம் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேசினார்கள்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-
இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த திருமகன் ஈவெரா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். இளைஞர்களின் நலனுக்காக ரூ.7 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுத்து உள்ளார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.21 லட்சம் செலவில் கர்ப்பிணிகளுக்கு பிரசவ அறை கட்டி கொடுத்து உள்ளார். மேலும், சாக்கடை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உள்ளார். இங்குள்ள மக்களுக்கு பட்டா இல்லை. எனவே பட்டா வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் மத்திய மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார். உங்களுக்காக மீண்டும் சேவை செய்வதற்கு அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்வம்
வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-
இந்த ராஜாஜிபுரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கும், எனக்கும் 40 ஆண்டுகளாக அறிமுகம் உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த இடம். ஏனென்றால் இந்த பகுதி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். எனது மகன் ஆற்றிய பணிகளை பற்றி அமைச்சர் கூறும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் மறைந்த துக்கத்தை என்னால் முழுமையாக மறக்க முடியாது என்றாலும், இங்குள்ள தாய்மார்கள், சகோதர, சகோதரிகளின் ஆதரவை அவர் பெற்றிருப்பதை நினைத்து ஓரளவு மறக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இங்குள்ள மக்களுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. அமைச்சர்கள் உங்களிடம் உள்ள கோரிக்கைகளை தினமும் சந்தித்து கேட்டறிந்து வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். எனது முன்னோர்கள் தந்துவிட்ட சொத்தில் 90 சதவீதத்தை விற்றுவிட்டேன். மீதமுள்ள 10 சதவீத சொத்துகளும் எனக்கு, எனது மனைவி, எனது மகனுக்கு போதுமானது. எனவே மக்களுக்காக பணியாற்றும் செல்வத்தை பெற்றால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.