சபரிமலையில், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி பெட்டியை சுமந்த பட்டிவீரன்பட்டி பக்தர்


சபரிமலையில், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி பெட்டியை சுமந்த பட்டிவீரன்பட்டி பக்தர்
x

சபரிமலையில், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி பெட்டியை பட்டிவீரன்பட்டி பக்தர் சுமந்து சென்றார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா (வயது 58). அய்யப்ப பக்தரான இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலையில் சேவையாற்றி வருகிறார். அகிலபாரத அய்யப்ப சேவா சங்கத்தின், தமிழ் மாநில அமைப்பு சார்பில் ராமையா, சபரிமலையில் நடை திறந்திருக்கும் மாத பூஜை நாட்கள், விஷேச நாட்கள் மற்றும் மண்டல, மகரவிளக்கு நாட்களில் அங்கேயே தங்கி சேவை செய்வது வழக்கம்.

மேலும் சபரிமலையில் நடை திறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் அவர் தவறாமல் சபரிமலைக்கு சேவை செய்வதற்காக சென்று விடுவார். அங்கு தங்கியிருந்து கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக சபரிமலையில் அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் செயல்படும் அவசர உதவி பிரிவில் பணியாற்றி வருகிறார். சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுவது இந்த பிரிவின் பணியாகும்.

இந்தநிலையில் தொடர்ந்து சேவையாற்றி வரும் ராமையாவின் பணிகளுக்காக மண்டல பூஜையின்போது அய்யப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமந்து வரும் வாய்ப்பினை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் அவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி, இன்று தங்க அங்கி அடங்கிய பெட்டியை ராமையா தலைசுமையாக சுமந்துகொண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சபரிமலையில் தொடர்ந்து சேவை செய்து வருவதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அய்யப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநில அமைப்பு எனக்கு இந்த அரிய பாக்கியத்தை வழங்கியுள்ளது. இது எனது வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். என் ஆயுள் முழுவதும் சபரிமலையில் பக்தர்களுக்காக சேவை செய்வேன் என்றார்.


Next Story