அடகு கடைக்காரரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை
அணைக்கட்டு அருகே அடகு கடைக்காரரை தாக்கி ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அடகு கடைக்காரர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு- ஒடுகத்தூர் மெயின் ரோடு கருணீக தெருவை சேர்ந்தவர் பகதராம். இவரது மகன் சுரேஷ் குமார் வாக் (வயது 26). இவர் கரடிக்குடி கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அடகு கடையை பூட்டி விட்டு, ரூ.40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவரது சித்தப்பா மகன் மற்றும் நண்பர் மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அணைக்கட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தாங்கல் கிராமம் அருகே உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது 6 பேர் கும்பல், சுரேஷ்குமார் வாக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை மரித்து 3 பேரையும் கத்தியை காட்டி பணத்தையும், நகையையும் தருமாறு மிரட்டி தாக்கியுள்ளனர்.
ரூ.40 ஆயிரம் கொள்ளை
இதில் பயந்துபோன 3 பேரும் அவர்கள் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை அந்த கும்பலிடம் கொடுத்து விட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் வாக் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்து இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.