வண்டலூர் அருகே பயங்கரம் அ.தி.மு.க. கவுன்சிலர் வெடிகுண்டு வீசி கொலை
வண்டலூர் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் அ.தி.மு.க. கவுன்சிலர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் பொன்மார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் டி.ரவி. இவர் வேங்கடமங்கலம் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது மனைவி கல்யாணி ரவி. இவர் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் அன்பரசு (வயது 28). இவர் வேங்கடமங்கலம் 9-வது வார்டு ஊராட்சி மன்ற கவுன்சிலராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர், பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் அன்பரசு நேற்று முன்தினம் இரவு தனது காரில் கண்டிகை அருகே உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும், மீண்டும் அதே காரில் வேங்கடமங்கலம் நோக்கி நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.
வெடிகுண்டு வீச்சு
அப்போது கீரப்பாக்கம் சுடுகாடு அருகே வந்த நிலையில், திடீரென எதிரே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை வழிமறித்து அவர்களது கையில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை அன்பரசு கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வீசினார்கள்.
இதில் காரின் பின்பக்கம் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. உடனே அன்பரசு ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதை அறிந்து அவரும், அவரது நண்பர்களும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். ஆனால் அந்த 4 பேர் கொண்ட கும்பல் அன்பரசை மட்டும் குறி வைத்து விடாமல் துரத்திச் சென்று சுற்றி வளைத்து கை, கால், கழுத்து, தலை உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
சம்பவ இடத்திலேயே சாவு
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அன்பரசு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுதாகர், மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று நடந்த சம்பவங்கள் பற்றி விசாரித்தனர். இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலம் தொடர்பான பிரச்சினையால் அன்பரசு கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
மேலும் கீரப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை போலீசார் 3 தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அன்பரசு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வேங்கடமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ரத்தினமங்கலம் அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை மிரட்டல்
மறியல் சம்பவம் பற்றி தகவல் அறிந்த தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை குண்டுகட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் உயிரிழந்த அன்பரசுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்ததாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருந்ததாகவும்,
புகாரின் பேரில், தாழம்பூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த கொலை நடந்ததாக சரமாரியாக குற்றம் சாட்டினர்.
போலீசார் குவிப்பு
அப்போது, கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தாம்பரம் மாநகர போலீசாரும், காயார் போலீசாரும் இணைந்து விரைவில் கைது செய்வதாக அவர் உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த கொலை சம்பவம் காரணமாக தொடர்ந்து வேங்கடமங்கலம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி இருப்பதால் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டப்பட்ட அன்பரசுக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.