நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் உதவி ஆணையாளர் தகவல்


நல நிதி செலுத்தும்  தொழிலாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  உதவி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2022 1:00 AM IST (Updated: 1 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நலத்திட்டம்

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர் சார்ந்தோர்களுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பிரி.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பிற்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர் கல்விக்கான நுழைவு தேர்வு உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வரை மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாநில அளவில் விளையாட தகுதி பெறுவோருக்கு விளையாட்டு உதவித்தொகை, மாநில அளவில் வெற்றி பெற்றோருக்கு ஊக்கத்தொகை, முதல் 3 இடங்களை பெறுவோருக்கு பரிசு தொகை வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை

மேலும் தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்கியதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, தொழிலாளி மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்டங்களில் பயன்பெற, தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிலாளியின் மாத ஊதிய உச்சவரம்பு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

தொழிலாளர்களிடம் இருந்து கல்வி தொடர்பான விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை, 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை6' என்ற முகவரியிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044 24321542, 8939782783 ஆகிய எண்களில் வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story