காமராஜர் சிலை அமைப்பு குழுவிடம் இழப்பீட்டுத்தொகை வழங்கல்
ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைப்பு குழுவிடம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
நெல்லை - தென்காசி நெடுஞ்சாலை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் நகருக்குள் நெடுஞ்சாலையினால் கையகபடுத்தப்பட்ட இடங்களில் அமைந்திருந்த கடைகளுக்கு நெடுஞ்சாலை துறையினர் இழப்பீடு வழங்கினார். அதே போல் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கும் காங்கிரஸ் பிரமுகரான அருமைநாயகம் என்பவரது வங்கி கணக்கிற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 526 ரூபாயினை இழப்பீட்டு தொகையாக நெடுஞ்சாலை துறையினர் அனுப்பி வைத்தனர்.
தற்போது அகற்றப்படும் காமராஜர் சிலைக்கு மாற்றாக புதிய சிலை அமைப்பதற்கு ஆலங்குளம் ஊர் பொதுமக்கள் சார்பாக சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நெடுஞ்சாலை துறையினரால் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையினை முன்னாள் எம்பி ராமசுப்பு தலைமையில் காங்கிரஸ் பிரமுகர் அருமைநாயகம் சிலை அமைப்புக் குழு தலைவர் ஜான்ரவியிடம் காசோலையாக வழங்கினர். ஆலங்குளம் காங்கிரஸ் நிர்வாகிகள், சிலை அமைப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.