பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது.
அதன்படி அவினாசி தாலுகாவில் வேலாயுதம்பாளையம் கிராமத்துக்கு கருணைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் மணக்கடவு கிராமத்துக்கு தேர்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், காங்கயம் தாலுகாவில் பச்சாபாளையம் கிராமத்துக்கு பச்சாபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் கொழுமம் கிராமத்துக்கு நல்லண்ணகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் புளியம்பட்டி கிராமத்துக்கு புளியம்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடக்கிறது.
இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமத்துக்கு கணக்கம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் குப்பாண்டம்பாளையம் கிராமத்துக்கு குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், உடுமலை தாலுகாவில் குறுஞ்சேரி கிராமத்துக்கு குறுஞ்சேரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கு செங்கப்பள்ளியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் பொதுமக்கள், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு, கோரி மனுக்களை பதிவு செய்யலாம். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
-------------