ஜெயின் சமூகத்தினர் அமைதி ஊர்வலம்
சமணர் கோவிலை சுற்றுலா தலமாக அறிவித்ததை ரத்து செய்ய கோரி ஊட்டியில் ஜெயின் சமூகத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
ஊட்டி,
சமணர் கோவிலை சுற்றுலா தலமாக அறிவித்ததை ரத்து செய்ய கோரி ஊட்டியில் ஜெயின் சமூகத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
சுற்றுலா தலமாக அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் பார்ஷ்வநாத் பர்வத் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி புனித தலமாக உள்ளது. சமண மத நம்பிக்கையின்படி, 24 ஜைன தீர்த்தங்கரர்களில் 20 பேர் மற்றும் துறவிகள் இங்கு மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சமண மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக சென்று வருகின்றனர்.
ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி மற்றும் குஜராத்தில் உள்ள கிரிராஜ் ஆகியவை சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், புனித தன்மை பாதிக்கப்பட்டு, ஜைன மத கோட்பாடுகளுக்கு எதிராக அசைவம் அதிகரித்து பல்வேறு சமுதாய பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் மதத்தினர் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதி ஊர்வலம்
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் ஜெயின் மக்கள், சமணர் கோவிலை சுற்றுலா தலமாக அறிவித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி அமைதி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் ஊட்டி மெயின் பஜாரில் தொடங்கி அப்பர் பஜார், கமர்சியல் சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. இதற்கு ஜெயின் அமைப்பின் தலைவர் ஹீராலால் தலைமை தாங்கினார். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை ஜெயின் சங்க பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் வழங்கினர்.
ேமலும் தங்களது நியாயமான கோரிக்கைக்கு பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மாற்று வழியில் வாகனங்களை திருப்பி அனுப்பினர். முன்னதாக ஜெயின் சமூகத்தினர் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் குன்னூரில் நடைபெற்ற ஊர்வலத்தை ஜெயின் சங்க தலைவர் ஜவுரி லால் தொடங்கி வைத்தார். புளூஹில்ஸ் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் மவுண்ட் ரோடு வழியாக ஜெயின் கோவில் வரை நடைபெற்றது.