மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அமைதி ஊர்வலம்
பேரணாம்பட்டில் கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அமைதி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைதி ஊர்வலம்
பேரணாம்பட்டு தாலுகா அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றதையும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்தும், இனப் படுகொலை, தேவாலயங்கள், வீடுகளை தீக்கரையாக்கி சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதை கண்டித்து அமைதி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
பேரணாம்பட்டு டவுன் புத்துக்கோவில் சந்திப்பு சாலை, அம்பேத்கர் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு பேரணாம்பட்டு நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான ஆலியார்ஜூ பேர் அஹம்மத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டம்
ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜனார்த்தனன், டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. பிரதிநிதி வில்லியம் பீட்டர் வரவேற்றார். அமைதி ஊர்வலம் நகராட்சி அலுவலகம், லாரி ஷெட், நெடுஞ்சாலை வழியாக சென்று நான்கு கம்பம் பகுதியை அடைந்தது.
அங்கு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் த.மு.மு.க. மாநில துணை செயலாளர் சனாவுல்லா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி கவுன்சிலர்கள் ஜானகி, முஜம்மில் அஹம்மத், சுல்தான், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத், மாவட்ட பிரதிநிதி பிரபாத் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் சரவணன், பாதிரியார்கள் ராஜதுரை, தினகரன், ஞானசேகரன், சாம்சன் தயாள பிரபு, சம்பத், சார்லஸ் மகேந்திரன், நாட்டாண்மை அக்பர், விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் வேதாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாதிரியார் பால் ஞானசேகரன் நன்றி கூறினார்.