புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டின் உள்ளே சார்பதிவாளர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்துக்கு செல்லும் வழியில் தினசரி மார்க்கெட் அமைந்துள்ளது. சார் பதிவாளர் அலுவலகம் விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ள சூழ்நிலையில் அருகில் உள்ள சத்திரம் அரசு பள்ளி வளாகத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தினசரி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. நகராட்சியின் இந்த அறிவுப்புக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று மாலை சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர் தலைமையில் ஆணையாளர் சக்திவேல் நகர் மன்ற தலைவர் ஜனார்த்தனன் துணைத்தலைவர் சிதம்பரம் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வியாபாரிகள் கூறுகையில், 'சத்திரம் பள்ளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. மேலும் கடைகளை மாற்றம் செய்ய அதிக செலவு ஆகும். எனவே இடமாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும்,' என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் வியாபாரிகள் கடையை காலி செய்து கொடுப்பது பற்றி முடிவு தெரிவிக்கவேண்டும் என தாசில்தார் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.