சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம்
தடுப்பணை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் எதிரொலி
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லை வாசலில் பழவஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் எதிரொலி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.
சாலை மறியல்
சீர்காழி அருகே திருமுல்லை வாசலில் பழவஞ்சாறு உப்பனாற்றில் தடுப்பணை இல்லாததால் உப்பு நீர் ஊருக்குள் புகுந்து திருமுல்லைவாசல், ராதா நல்லூர், விழுதலைக்குடி, எடமணல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விலை நிலங்கள் தொடர்ந்து உப்பு நீரால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்.
இதை போல் திருமுல்லைவாசல் தாழை இருதய நகருக்கு பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்வதாக அறிவித்து சீர்காழி நகர் பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
சமாதான கூட்டம்
இதன் எதிரொலியாக சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தாசில்தார் ரஜினி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித்துறை பொறியாளர் கனக சரவணன், சீர்காழி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயா கிருபா, தி.மு.க நிர்வாகி ஸ்டீபன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பழவஞ்சாறு ஆற்றின் குறுக்கே மூன்று நாட்களுக்குள் தடுப்பணை அமைக்கும் பணியை தொடங்குவது, இதேபோல் தாழை இருதய நகரில் விரைவில் பயணிகள் நிழற்குடை கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊர் தலைவர்கள் துரைராஜ், ஜெயந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.