இளைஞர்களுடன் சமாதான கூட்டம்
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் இளைஞர்களுடன் சமாதான கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கோவில் பகுதியில் கடை வைப்பதற்காக ஏலம் விடப்பட உள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறையினர் ஒழுங்குப்படுத்த வேண்டும், அதிகாரிகளே நேரடியாக ஏலம் விட்டு கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூட்டை, செம்பராம்பட்டு, பாவளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
இது தொடர்பான சமாதானம் கூட்டம் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் (இந்து சமய அறநிலையத்துறை) மணிமேகலை, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் 3 கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஏலம் விடுவது முறைப்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தையும் இளைஞர்கள் ஒத்தி வைத்தனர்.