வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பியது: வதந்தி பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு


வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பியது: வதந்தி பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு
x

தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பியது என்றும், வதந்தியை பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகவும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கோவை,

கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனத்தினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த 1-ந்தேதி முதல் பரப்பப்பட்ட வதந்திகள், அதன் மூலம் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றை சரியான முறையில் கையாண்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன்பிறகு தமிழகத்தில் இருந்த பதற்றம் தற்போது தணிந்து உள்ளது.

அமைதி திரும்பியது

தற்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பி உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பொய் வதந்திகள் பரப்பப்பட்டு தான் வருகிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகளில் தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்க டெல்லி, போபால், பெங்களூரு, பாட்னா ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் முகாமிட்டு உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்களிடம் தொடர்ந்து உரையாடல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில் அதிபர்களிடம் பேசி உள்ளோம். போலீசாரும் அவர்களுடன் பேசி ஒரு தொழிற்சாலைக்கு ஒரு வடமாநில ஊழியர் என்று வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சியினருடன் தொடர்பு

மேலும் அவர்கள் குடியிருந்து வரும் பகுதியில் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளத்தில் தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாத வீடியோவை பதிவேற்றம் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று வீடியோவை தயாரித்து வெளியிட்டு வரும் குழுவை கண்டுபிடித்து அவர்கள் தயாரித்த வீடியோவை கைப்பற்றி உள்ளோம். இதில் தொடர்புடையவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் சிலருக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பும் உள்ளது. விசாரணையின் முடிவில்தான் முழு விவரமும் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வடமாநில தொழிலாளர்களை சந்தித்தார்

அதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கோவை சரவணம்பட்டி, கருமத்தம்பட்டியில் உள்ள மில்களுக்கு நேரில் சென்றார். அவர், அங்கு வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து தமிழக அரசு உங்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் அளிக்கும் என்று உறுதி அளித்தார்.


Next Story