முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில் திருவிழா
கோத்தகிரி அருகே குயின்சோலை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 24-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலையில் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர். ராட்சத கிரேன்களில் தொங்கியவாறு பறவை காவடி ஏந்தியும், கத்தி காவடி ஏந்தியும் ஊர்வலமாக வந்தார்கள். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கிரேன்களில் பறவை காவடி எடுத்து வந்தது, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால் குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அம்மன் வீதி உலா
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வந்தார். முக்கிய வீதிகளில் உலா வந்து, முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள், காலை 10 மணி முதல் மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு அம்மன் பவனி வருதல், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.