119 வாகனங்களுக்கு அபராதம்
வாணியம்பாடி பகுதியில் 119 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வாணியம்பாடி அருகே வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 119 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், அமர்நாத் ஆகியோர் கடந்த மே மாதம் 908 வாகனங்களை சோதனை மேற்கொண்டனர். இதில், 119 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 440 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், சாலை வரி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 177 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மோட்டார் வாகன சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று, காப்புச் சான்று புதுப்பிக்காமல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நபரை விட கூடுதலாக நபர்களை ஏற்றி இயக்கப்பட்ட 10 வாகனங்களை பறிமுதல் செய்து, வாகனங்களில் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.