பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்


பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள், அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளில் காலதாமதங்கள் மற்றும் நிலுவைப்பணிகள் குறித்து 7 ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் பணி மேற்கொண்டு வரும் பணி ஒப்பந்ததாரர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் சுமார் 142 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் 124 சாலை பணிகள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

பணி தொடங்கவில்லை

இப்பணிகளில் இதுவரையில் 68 பணிகள் தொடங்கப்படவே இல்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. சாலை பணிகள் குறித்து மாதாமாதம் அதனுடைய நிலைகளை ஒவ்வொரு பணிக்கும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால் பணி ஒப்பந்தம் வழங்கி 2 மாதங்கள் நிறைவடைந்த போதிலும் கூட, இதுவரையில் பணி தொடங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆகவே இப்பணிகளின் ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் உடனடியாக பணியை தொடங்க வேண்டும். அதற்கான கால அளவு முறையில் பணிகளை முடிக்க வேண்டும்.

சாலை பணிகள் அவ்வப்போது தர கட்டுப்பாடு ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும், ஆகவே பணிகளை முறையாகவும் தரமாகவும் அமைப்பதில் ஒப்பந்ததாரர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்

அதேபோல பழைய கிராம சாலைகள் பழுதடைந்து இருப்பதை சீரமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் சீரமைத்து முடிக்க வேண்டும்.

பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் பணியினை ஒப்பந்த காலத்திற்குள் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மாவட்டத்தில் பணி நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் மேற்கண்ட பணிகளை முடிக்காத பணி ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆகவே ஒப்பந்ததாரர்கள் திட்டங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

இ்வ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தினில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story