மத்திய பிரதேசத்தில் தரமற்ற மருந்து தயாரித்தவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மத்திய பிரதேசத்தில் தரமற்ற மருந்து தயாரித்தவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஒரு மருந்து கடையில், சேலம் மாவட்ட மருந்து ஆய்வாளர்கள் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த மருந்து கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மைக்ரோ சைக்கிலின் என்ற மருந்தை பரிசோதனை செய்தபோது அது தரமற்றது என்று தெரியவந்தது. அந்த மருந்தை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த மருந்து தரமற்றது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருந்து தயாரித்த மத்திய பிரதேச மாநிலம் இன்டோர் பகுதியை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவன உரிமையாளர் பிரதீப் மேத்தா (வயது 50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி தரமற்ற மருந்து தயாரித்ததாக பிரதீப் மேத்தாவுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.