ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம் செய்த 3 பேருக்கு அபராதம்


ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம் செய்த 3 பேருக்கு அபராதம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம்செய்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம்செய்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம்

ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் சென்னை சென்டிரல் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரக்கோணத்தில் இருந்து வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள், பெண்கள், வியாபாரிகள், பொது மக்கள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர். அதில் இளைஞர்கள் சிலர் ரெயில் பெட்டிக்குள் செல்லாமல் 2 பெட்டிகளை இணைக்கும் கொக்கி மீது நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.

இதனை தடுத்து, அது போன்று பயணம் செய்பவர்கள் மீது ரெயில்வே துறையும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர். இது குறித்து 'தினத்தந்தி'யில் நேற்று செய்தி வெளியானது.

3 பேருக்கு அபராதம்

அதன் எதிரொலியாக நேற்று காலை அரக்கோணம் வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பெட்டியின் இணைப்பு கொக்கி மீது உட்கார்ந்து இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதற்கு கூட்ட நெரிசல் காரணமாக அங்கு நின்று பயணம் செய்வதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு இது போன்று ஆபத்தான பயணம் மேற்கொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.


Next Story