அதிக மாணவர்களை ஏற்றிய 5 ஆட்டோக்களுக்கு அபராதம்


அதிக மாணவர்களை ஏற்றிய   5 ஆட்டோக்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அதிக மாணவர்களை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அதிக மாணவர்களை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆட்டோக்களுக்கு அபராதம்

நாகர்கோவில் மாநகராட்சியில் ஆட்டோக்களில் பள்ளி மாணவ-மாணவிகளை அதிகளவு ஏற்றி செல்லக் கூடாது என்றும், அவ்வாறு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று கேப் ரோடு, கோட்டார் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

வாகன சோதனை

மேலும் மாணவ, மாணவிகளை அதிகளவு ஏற்றி வருவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து அறிவுரை கூறினர். இதையும் மீறி அதிக அளவு குழந்தைகளை ஏற்றி வந்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

அதோடு நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம், வேப்பமூடு, அண்ணா பஸ் நிலையம் முன் பகுதி, வடசேரி பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அந்த வகையில் 230 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.1.50 லட்சம் வசூல் ஆனது.


Next Story