கெட்டுப்போன புரோட்டா விற்ற கேண்டீன் உரிமையாளருக்கு அபராதம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கெட்டுப்போன புரோட்டா விற்ற கேண்டீன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர், தனது மனைவியை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அப்போது அவர், மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் புரோட்டா வாங்கியுள்ளார். ஆனால் அந்த புரோட்டா கெட்டுப்போய் இருந்தது. உடனே இதுகுறித்து கேண்டீன் ஊழியரிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் கேண்டீன் ஊழியரிடம், அந்த வாலிபர் வாக்குவாதம் செய்தார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது.
இதைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராகவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அந்த கேண்டீனில் காலாவதியான உணவு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கேண்டீன் அடைக்கப்பட்டது. மேலும் கேண்டீன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.