கொடைக்கானலில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் வைத்திருந்த 4 ஓட்டல்களுக்கு அபராதம்
கொடைக்கானலில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் வைத்திருந்த 4 ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் செயல்பட்டு வரும் ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்களை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் இன்று கொடைக்கானல் மூஞ்சிக்கல், பணிமனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 4 ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி, சப்பாத்தி, நூடுல்ஸ் மற்றும் மசாலா பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 4 கடைகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த மற்றொரு ஓட்டலுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கொடைக்கானலில் செயல்படும் ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.