திண்டுக்கல் பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம்
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ்நிலையத்துக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதன்மூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் தினமும் குவியும் இடமாக பஸ்நிலையம் திகழ்கிறது. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை மேற்கொள்வதற்கும் இடவசதி இல்லாமல் இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் குறுக்கும், நெடுக்குமாக பஸ்கள் நிறுத்தப்படுவதை பார்க்கலாம்.
இதற்கிடையே பயணிகளுக்கு இடையூறாக பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களில் சிலர் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றனர். அதோடு பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ்களை உரிய இடத்தில் நிறுத்தமுடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
அப்போது பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். ஒருசிலர் செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து போலீசாரிடம் சிக்கி கொண்டு அபராதம் செலுத்தினர். அதேபோல் பஸ்களை நிறுத்தும் இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்திய நபர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 53 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தினமும் காலை, மாலை நேரங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.