அடிக்கடி பழுதான புதிய மோட்டார் சைக்கிள்:தனியார் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
புதிய மோட்டார் சைக்கிள் அடிக்கடி பழுதானது. இதுதொடர்பான தனியார் மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பு கூறி உள்ளது.
புதிய மோட்டார் சைக்கிள் அடிக்கடி பழுதானது. இதுதொடர்பான தனியார் மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பு கூறி உள்ளது.
மோட்டார்சைக்கிள் பழுது
திருவாரூர் மாவட்டம் சிக்கவெளி சித்தரையூர் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். வக்கீல். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நாகை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். இந்த மோட்டார் சைக்கிள் வாங்கிய சில நாட்களில் பழுதடைந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை அதே நிறுவனத்தில் பழுது பார்க்க கொடுத்தார். அவர்கள் சரி செய்து கொடுத்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் மீண்டும் மீண்டும் அதே பழுது ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தை தொடர்பு கொண்டு பழுது பற்றி தெரிவித்து, அந்த நிறுவனத்தின் பழுது பார்க்கும் பிரிவில் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தார். அதன் பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை.
போக்குவரத்து போலீசார் அபராதம்
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜசேகரனின் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.200 அபராதம் விதித்து, ராஜசேகரனின் செல்போனுக்கு திருவாரூர் போக்குவரத்து போலீசார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். பழுது பார்க்க கொடுத்த மோட்டார் சைக்கிளை திரும்ப வாங்காத நிலையில் அபராதம் விதித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.
அதற்கு உரிய பதில் கிடைக்காததால் நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.2 லட்சம் அபராதம்
இந்த வழக்கில் நேற்று மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி தீர்ப்பு கூறினார். அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதமும், உரிய அனுமதியின்றி ராஜசேகரனின் மோட்டார் சைக்கிளை நிறுவனம் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதால் புதிய மோட்டார் சைக்கிளை வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இவற்றை 6 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து (வழக்கு செலவு தொகை நீங்கலாக) செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.