சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிஇன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிஇன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்,
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டிஇன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அபராதம்
நாகர்கோவில் கனியாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.76,500 கடன் பெற்றிருந்தார். தவணையை ஒழுங்காக செலுத்தி வந்த சூழ்நிலையில் திடீரென வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்கவில்லை. ஆகவே இருசக்கர வாகனத்திற்கென காப்பீடு செய்யப்பட்ட தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் கடன் வாங்கிய பணத்தை நிதி நிறுவனத்திற்கு செலுத்தி வாகனங்களுக்குரிய ஆவணங்களை திரும்ப தர வேண்டுமென நிதி நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் மதன் முறையிட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. உடனடியாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி உடனடியாக காப்பீடு செய்யப்பட்ட தொகையை செலுத்தி நுகர்வோருக்குரிய ஆவணங்களை திரும்ப கொடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.