நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்


நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விரைந்து முடிக்க வேண்டும்

அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசுகையில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சான்றுகள் உள்ளிட்ட சான்றுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். அனைத்து விதமான சான்றிதழ்களும் தாசில்தார்களால் தாமதமின்றி வழங்கப்படுவதை வருவாய் கோட்டாட்சியர்கள் தணிக்கை செய்ய வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் பொது மக்களுக்கு உரிய அறிவிப்பு செய்து, மாற்று இடம் வழங்கிய பிறகு அகற்றவேண்டும். இப்பணிகள் குறித்து ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணிக்க வேண்டும். வீட்டுமனை பட்டா, முதியோர் ஒய்வூதியம் குறித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்விளையாட்டு அரங்கம்

முன்னதாக ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் உண்டு உறைவிடப்பள்ளி, ஏலகிரிமலையில் ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி, ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணி, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜவஹர், கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story