போலீஸ் நிலையங்களில் குற்றவழக்குகளை நிலுவையின்றி விரைந்து முடிக்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் குற்றவழக்குகளை நிலுவையின்றி விரைந்து முடிக்க போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் குற்றவழக்குகளை நிலுவையின்றி முறைப்படி விரைந்து முடிக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும், விசாரணையில் உள்ள வழக்குகளில் விரைந்து சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அறிவுறுத்தல்
கூட்டத்தில், போலீஸ் நிலையங்களில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முறைப்படி முடிக்க போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவழக்குகளில் சாட்சிகளை முறையாக கோர்ட்டுகளில் ஆஜர் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போலீசாரின் கடமையாகும்' என்றார்.
கூட்டத்தில், குற்றவழக்குகளில் கோர்ட்டு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், தலைமை போலீசார் ஞானமுத்து, டேனியல் ராஜாசிங் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ், ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மற்றும் மற்றும் ேபாலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடி ஆயுதப்படைக்கு நேரில் சென்று துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் தளவாடங்கள் வைக்கப்பட்டுள்ள ஆயுதக்கிடங்கு மற்றும் போலீஸ் அங்காடி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.