``ஹெல்மெட்'' அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு பேனா, பென்சில் பரிசு
போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக புதிய சட்டம் புதுக்கோட்டையில் அமலுக்கு வந்த நிலையில் 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு எழுதுபொருட்களை பரிசாக போலீசார் வினியோகித்து பாராட்டினர்.
அபராத தொகை உயர்வு
சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பானதில் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி அபராதம் வசூலிக்கப்படுவது தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம், குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு விதிமீறல் தொடர்பாக அபராதம் தொகை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலும் கடந்த 1-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பேனா, பென்சில் வினியோகம்
இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் புதிய சட்டத்தின்படி அபராத தொகை வசூலிக்கப்படுவது தொடா்பாக போக்குவரத்து போலீசார் நேற்று மாலை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு பேனா, பென்சில் ஆகிய எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதேபோல ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரிக்கை விடுத்து, புதிய அபராத தொகை குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன், போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மரிய சாத்தோ திலகராஜ் உள்பட போலீசார் கலந்து கொண்டனர். மேலும் புதிய அபராத முறையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக புதுக்கோட்டை நகரப்பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.