ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
x

ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விண்ணப்பிக்கும் வகையில், 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அரியலூர்

சிறப்பு விண்ணப்பப்பதிவு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களிலும், 2-ம் கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களிலும் மொத்தம் 466 நியாய விலைக் கடைப்பகுதிகளில் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்டங்களில் விடுப்பட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்கள் வருகிற 19, 20-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் அறிவிப்பில், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத்திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையில்லை

தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய வருகிற 18, 19, 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த பயனாளிகள் அனைவரும் 18, 19, 20-ந் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தங்களது விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முதல் மற்றும் 2-ம் கட்ட விண்ணப்பப்பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story