பொங்கல் பரிசு தொகையை பாகுபாடின்றி வழங்கிட ஓய்வூதியர்கள் கோரிக்கை
பொங்கல் பரிசு தொகையை பாகுபாடின்றி வழங்கிட ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், ஓய்வூதியர் உரிமை நாளாக, அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். செயலாளர் மருதமுத்து சென்ற மாத சங்க கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஆதிசிவம் சென்ற மாத சங்க வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கவுதமன், பெரம்பலூர் வக்கீல் கோவிந்தன், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவையின் பொருளாளர் விளவை செம்பியன் ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வூதியர் தின விழா குறித்து பேசினர். பொங்கல் பரிசை அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பாகுபாடின்றி ரூ.1,000 ஆக தமிழக அரசு வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் மருத்துவ படியை ரூ.1,000 ஆக வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள 38 சதவீத அகவிலைப்படியை நிலுவையின்றி கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கீட்டு தமிழக அரசு வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியை விரைவில் தொடங்கிட வேண்டும். தமிழக அரசின் 8-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை அனுமதித்து வழங்கிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.