ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3-ந் தேதி நடக்கிறது.
விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையிலும் சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலையிலும் வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதிலும் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை வருகிற 21-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு இரட்டை பிரதிகளில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன், ஓய்வூதியர் பெயர், குடும்ப ஓய்வூதியர் என்றும் உறவு முறை, பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.