தீண்டாமை கம்பி வேலி அகற்றக்கோரி போராட்டம் அறிவிப்பு
அலகுமலை கைலாசநாதர் கோவில் அருகே தீண்டாமை கம்பி வேலியை அகற்றக்கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டதால் இரு தரப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அலகுமலை கைலாசநாதர் கோவில் அருகே தீண்டாமை கம்பி வேலியை அகற்றக்கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டதால் இரு தரப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கைலாச நாதர் கோவில்
பொங்கலூர் அருகே அலகுமலையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு கொடி கம்பம் மற்றும் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டதற்கு கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியின் இருபுறமும் நுழைவாயில் அமைக்கப்பட்டது. மேலும் கோவிலின் அருகே உள்ள கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பிரிவினர் கோர்ட்டை நாடினர். இதனை விசாரித்த கோர்ட்டு, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நேற்று தீண்டாமை கம்பி வேலி அகற்றும் போராட்டம் மற்றும் தலித் மக்களின் 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து நேற்று கோவிலில் சம்பந்தப்பட்ட பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். இதன் காரணமாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், அவினாசிபாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தாசில்தார் கோவிந்தராஜன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோரும் வந்தனர். பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி. கலையரசன், பல்லடம் தொகுதி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தரப்பில், இந்த கம்பி வேலியை முழுமையாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் சென்று வர எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது. மேலும் கோவிலின் அருகில் உள்ள கேட்டையும் திறந்து விட வேண்டும் என்றனர்.
இதே நிலை தொடர வேண்டும்
வரும் திங்கட்கிழமை அமைதி பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அதுவரை அமைதி காக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து சென்றனர். மேலும் கோவில் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, "ஏற்கனவே 2010 முதல் என்ன நடைமுறை அறிவிக்கப்பட்டதோ அது அப்படியே தொடர வேண்டும். இதில் எந்த விதமான மாறுதலும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும்." என்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் ஒரு மணி வரை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.