மாரண்டஅள்ளி மயானங்களில் இட பற்றாக்குறையால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் அவதி-மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மாரண்டஅள்ளி மயானங்களில் இட பற்றாக்குறையால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் அவதி-மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் மயானங்களில் இட பற்றாக்குறை காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் ஏற்பட்டு வரும் சிரமத்திற்கு தீர்வு காண மின் மயானம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இட பற்றாக்குறை

தர்மபுரி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகர பகுதிகளில் ஒன்றாக மாரண்டஅள்ளி உள்ளது. மாரண்டஅள்ளி நகர பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 550 குடியிருப்புகள் உள்ளன. 14 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த நகர பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து மற்றும் வணிக மையமாக மாரண்டஅள்ளி நகரம் உள்ளது. மாரண்டஅள்ளி நகர பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்காக மல்லாபுரம் சாலையில் பொது மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர வெள்ளிச்சந்தை சாலை பகுதி உள்பட 4 இடங்களில் மயானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ள பலர் அங்கு சமாதிகளை கட்டி உள்ளனர்.

இந்த மயானங்களில் பெரும்பான்மையான இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டதால் அண்மைக்காலமாக இட பற்றாக்குறை ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் ஏற்கனவே உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை தோண்டி மீண்டும் அந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாரண்டஅள்ளி நகர பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் மின் மயானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாரண்டஅள்ளி நகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

15 கி.மீ. தூரம்

சமூக ஆர்வலர் பாண்டியன்:-

மாரண்டஅள்ளி நகரம் விரைவாக விரிவடைந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இங்கு உள்ள மயானங்களில் இப்போது இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கு மின் மயான வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க விரும்புவோர் 15 கி.மீ. தொலைவில் உள்ள பாலக்கோடு பகுதிக்கு உடல்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாரண்டஅள்ளி பகுதியிலேயே மின் மயானம் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தர தீர்வு

கட்டுமான ஒப்பந்ததாரர் கண்ணன்:-

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள மயானங்கள் போதிய இட வசதி இல்லாத பகுதிகளாக மாறிவிட்டன. தற்போதைய சூழலில் புதிய இடங்களை தேடி கூடுதல் மயானங்களை உருவாக்குவதில் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. மின் மயானம் அமைப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசுபாடு குறையும்.

சுகாதார சீர்கேடு

விவசாயி பார்த்திபன்:-

மாரண்டஅள்ளி நகர பகுதியில் உள்ள மயானங்களில் இட பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை தோண்டி அங்கு கூடுதலாக உடல்களை புதைக்கும் போது சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மயானங்கள் அமைந்துள்ள பகுதிகள் அருகே விவசாய விளைநிலங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க மாரண்டஅள்ளி பகுதியில் மின் மயானம் அமைப்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது. எனவே அதற்கான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.

அதிக செலவால் பாதிப்பு

சமூக ஆர்வலர் கோவிந்தராஜ்:-

மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைத்தல், சுடுகாடுகளில் எரித்தல் ஆகியவை அதிக செலவு மிகுந்தவையாக மாறிவிட்டன. இதனால் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள மயானங்களில் ஏற்கனவே இட பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதற்கு மாற்றாக மின் மயானம் அமைத்தால் அங்கு இறந்தவர்களின் உடலை எரிக்க கட்டணம் குறைவு. மின் மயானத்தால் சுகாதார பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே மாரண்டஅள்ளி நகர பகுதியில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய மின் மயானம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story