தேனியில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு வீடுகள் சேதமடைந்ததால் விடிய, விடிய தவித்த மக்கள்
தேனியில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு வீடுகள் சேதமடைந்ததால் விடிய, விடிய பொதுமக்கள் தவித்தனர்.
தேனியில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு வீடுகள் சேதமடைந்ததால் விடிய, விடிய பொதுமக்கள் தவித்தனர்.
மழைக்கு வீடுகள் இடிந்தன
தேனி ரெயில் நிலையம் அருகில் குட்செட் தெருவில் பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு அரசு துறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பெய்த கனமழையால் தேனி நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மேலும் பல்வேறு பகுதிகளை புரட்டிப்போட்டது. அதில், குட்செட் தெருவும் ஒன்று. அங்கிருந்த 4 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் சில வீடுகளில் லேசான சேதம் அடைந்தன. அந்த குடியிருப்பு அருகில் மின்வாரிய அலுவலக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதில் பல வீடுகளில் இருந்த பொருட்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
குடியேறும் போராட்டம்
இதனால் வீடுகளை இழந்த 35 பேர் இன்று அங்கிருந்து புறப்பட்டு தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் குடிசை மாற்றுவாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வந்தனர். அங்கு இருந்த வீடுகளுக்குள் அவர்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அ.ம.மு.க. நகர செயலாளர் காசிமாயன் தலைமை தாங்கினார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் திடீரென குடியேறிய மக்கள் கூறுகையில், "குட்செட் தெருவில் மின்வசதி, சாக்கடை கால்வாய் வசதி எதுவும் இன்றி வசித்து வந்தோம். மாற்று இடம் கேட்டு பல முறை மனு கொடுத்துவிட்டோம். குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கு ரூ.2½ லட்சம் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள். எங்களால் அந்த தொகையை மொத்தமாக செலுத்த முடியாது என்பதால், மாதாந்திர தவணை முறையில் செலுத்தி விடுகிறோம் என்றோம். ஆனால், அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடு இடிந்து விழுந்த நிலையில் விடிய, விடிய பரிதவிப்போடு இருந்தோம். மாற்று இடங்களில் தங்க வைக்க கூட அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால், இங்கே கட்டி முடித்து 3 ஆண்டுகளாக மக்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறி உள்ளோம்" என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து தொடர்ந்து அங்கேயே வசிக்கப் போவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.