வேலூரில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூரில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வெயில் தாக்கம்
வேலூரில் கோடை வெயில் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே தொடங்கியது. தொடர்ந்து மார்ச் மாதத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. 95 டிகிரி முதல் 99 டிகிரி வரை வெயிலில் அளவு பதிவானது. மார்ச் 27-ந் தேதி முதல் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. தொடர்ந்து சதத்தை தாண்டியே வெயில் அளவு பதிவானது.
கடந்த 17-ந் தேதி 103.7 டிகிரியாகவும், 18-ந் தேதி 104.5 டிகிரியாகவும், 19-ந் தேதி 103.8 டிகிரியாகவும், நேற்று முன்தினம் 104.7 டிகிரியாகவும் பதிவானது. பரபரப்பாக காணப்படும் நகர சாலைகளில் மதிய வேளையில் வாகனங்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இரவிலும் அனல் காற்று வீசியதால் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
திடீர் மழை
கோடை மழை பொழியுமா? என்று மக்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். நேற்று பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வாகனஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். இந்த நிலையில் மதியம் 2.30 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3.30 மணி அளவில் வேலூரில் பல இடங்களில் திடீரென சாரல்மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாக மாறியது. சிறிது நேரம் கொட்டிய பலத்த மழைக்கு பின்னர் சாரல் மழை பெய்தது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஏராளமான வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு சென்றனர். இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.