தானியங்கி குடிநீர் எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி
கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தானியங்கி குடிநீர் எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தானியங்கி குடிநீர் எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரங்கள்
நீலகிரி மாவட்டத்தின் பசுமையை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியும் 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் ஏ.டி.எம்.கள் இல்லாத பகுதிகளில் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை போட்டு குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த தானியங்கி எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி வந்தன. பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஏ.டி.எம். எந்திரங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தண்ணீர் இல்லை
இந்தநிலையில் கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரத்தில் தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எந்திரங்களில் ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தினால் 100 மில்லி லிட்டர், 2 ரூபாய்க்கு 200 மில்லி லிட்டர், 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஆனால், தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த தொழில்நுட்ப கோளாறால் தண்ணீர் காலியாகி விடுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் எந்திரம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் தண்ணீர் நிரப்பவும், சோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.