அரசு பஸ் இயக்காததால் பொதுமக்கள் அவதி
மயிலாடும்பாறை-தாழையூத்து இடையே அரசு பஸ் இயக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மயிலாடும்பாறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூலக்கடை, முத்தாலம்பாறை வழியாக தாழையூத்து கிராமம் வரை புதிய அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் தாழையூத்து மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வந்த நிலை மாறி பஸ்சில் இலவசமாக பயணம் செய்து வந்தனர்.
இந்த டவுன் பஸ் நாள் ஒன்றுக்கு 2 முறை தாழையூத்து கிராமத்துக்கு வந்து சென்றது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாழையூத்து வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது முத்தாலம்பாறை வரை மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தாழையூத்து பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி முத்தாலம்பாறை வரை ஆட்டோக்களில் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ்சை மீண்டும் தாழையூத்து வரை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.